நாய் கடித்து 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள மேட்டுவளவு பகுதியில் முத்துப்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 5 வயதில் பாலகேஸ்வரன் என்ற மகன் உள்ளது இந்நிலையில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு வீட்டிற்கு அருகே சிறுவன் அவரது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியில் சென்று கொண்டிருந்த நாய் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை விரட்டியுள்ளது. இதனையடுத்து அலறியடித்து ஓடிய பாலகேஸ்வரனை விரட்டி பிடித்து நாய் கடித்துள்ளது. இதில் பாலகேஸ்வரன் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனை பார்த்த சிறுவனின் பெற்றோர் உடனடியாக பாலகேஸ்வரனை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு நாய்க்கடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்த பாலகேஸ்வரன் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.