தண்ணீரில் மூழ்கி 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இங்குள்ள தாம்பரம் அடுத்த ஊரப்பாக்கம் பகுதியில் சத்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மணிமாலா என்ற மனைவியும் 1 மகன் மற்றும் 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் சத்யராஜ் வேலைக்கு சென்று இருந்த நேரத்தில் மணிமாலா வீட்டில் உள்ள வேலைகளை முடித்துவிட்டு களைப்பில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வெளியே விளையாடிக் கொண்டிருந்த மணிமாலாவின் 2 வயது மகள் ஷாலினி குடிநீருக்காக வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து விட்டார்.
இதனையடுத்து சிறிது நேரம் கழித்து வீட்டிலிருந்து எழுந்து வந்த மணிமாலா தண்ணீர் தொட்டிக்குள் ஷாலினி பிணமாக கிடந்ததைப் பார்த்து மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளார். அதன் பிறகு மணிமாலா ஷாலினியை ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு ஷாலினியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது தொடர்பாக கூடுமாஞ்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தொட்டிக்குள் குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.