திடீரென பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மோரமடுகு கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுமார் 70-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் என 2 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தலைமை ஆசிரியர் விடுப்பு எடுத்திருந்ததால் உதவி ஆசிரியர் மட்டுமே பணியில் இருந்தார். இதனால் மாணவர்கள் வகுப்பறையில் இல்லாமல் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் திடீரென பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த வட்டார கல்வி அலுவலர்கள் செல்வராஜ் மற்றும் சீனிவாசன் ஆகியோர் பள்ளிக்கு விரைந்து வந்தனர். இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பெற்றோர்கள் உதவி ஆசிரியரை பணியிடை மாற்றம் செய்ய வேண்டும் எனவும், மாணவர்களின் நலன் கருதி கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர். அதற்கு அதிகாரிகள் உதவி ஆசிரியரை வேறு பள்ளிக்கு பணியிடை மாற்றம் செய்வதாகவும் தற்காலிகமாக ஒரு ஆசிரியர் நியமிக்கப்படுவார் எனவும் உறுதி அளித்தனர். இதனையடுத்து பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.