குழந்தையிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற கோலமாவு வியாபாரியை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள வடபழனி பக்தவச்சலம் காலனியில் தாமோதரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அபிராமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3 வயதுடைய ரித்திகா என்ற குழந்தை இருக்கிறது. இந்நிலையில் ரித்திகா தனது வீட்டு வாசலில் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சைக்கிளில் சென்ற கோலமாவு வியாபாரி ஒருவர் ரித்திகாவிடம் பேச்சு கொடுத்து அவள் அணிந்திருந்த 1/2 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்துள்ளார்.
இதனையடுத்து குழந்தையின் அழுகுரல் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று வியாபாரியை மடக்கிப் பிடித்து சரமாரியாக அடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் குரோம்பேட்டையை சேர்ந்த மரியான் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மரியானை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.