கிணற்றில் தவறி விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள பட்டூர் பகுதியில் மருதுபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு யாஷிகா ஸ்ரீ(3) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் நடுநிலைப் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை மருதுபாண்டி வேலை பார்க்கும் தோப்பில் யாஷிகா ஸ்ரீ விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுமி தோப்பில் இருந்த கிணற்றில் தவறி விழுந்துவிட்டார். இதனையடுத்து மகளை காணவில்லை என சிறுமியின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர்.
ஆனாலும் அவர் கிடைக்கவில்லை. இறுதியாக யாஷிகா ஸ்ரீ கிணற்றில் விழுந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சிறுமியின் உடலை மீட்டனர். அதன் பிறகு சிறுமியின் உடல் மேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.