சுவர் இடிந்து விழுந்து இரண்டு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சின்னையன் பேட்டை கிராமத்தில் மாரிமுத்து- கண்மணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு வயதுடைய ரித்விக் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு மாரிமுத்து தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வந்துள்ளார்.
நேற்று முன்தினம் ரித்விக் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சுவர் இடிந்து ரித்விக் மீது விழுந்தது. இதனால் படுகாயமடைந்த ரித்விக்கை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரித்விக் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.