நண்பர் விளையாட்டாக கட்டி இறுக்கி அணைத்ததில் இளம்பெண்ணின் விலா எலும்புகள் உடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனா நாட்டின் உகான் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் இளம்பெண் ஒருவர் பணிபுரிந்து வருகின்றார். அவர் கடந்த மே மாதம் தனது அலுவலக நண்பர்களுடன் டீ அருந்திக்கொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவர் விளையாட்டாக அவரை திடீரென கட்டி அணைத்திருக்கின்றார். அப்போது அந்தப் பெண்ணுக்கு அதிக வலி ஏற்பட்டிருக்கின்றது. ஆனால், அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத அவர், மாலை பணிமுடிந்து வீடு திரும்பியிருக்கின்றார். இரவு வலி அதிகமாக இருக்கவே, சூடு நீரில் ஒத்தடம் வைத்துக்கொண்டு படுத்திருக்கின்றார். மறுநாளும் வலி குறையாததால் அலுவலகத்தில் விடுமுறை எடுத்து விட்டு வீட்டிலேயே இருந்துவிட்டார். பின்னர் நேரம் செல்ல செல்ல வலி அதிகமாக இருந்ததால் மருத்துவமனைக்குச் சென்றிருக்கின்றார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஸ்கேன் எடுத்து பார்த்துள்ளனர். அதில் இளம்பெண்ணின் மூன்று விலா எலும்புகள் உடைந்திருந்தது தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து, அந்த இளம்பெண் சில மாதங்கள் வேலைக்குச் செல்லாமல் மருத்துவச் செலவில் சிகிச்சை பெற்றிருக்கின்றார். இந்நிலையில், மருத்துவ சிகிச்சை முடிந்து வேலைக்கு திரும்பிய அந்த இளம்பெண், இறுக அணைத்து தன் விலா எலும்புகளை உடைத்த அந்த நபரிடம் தன்னுடைய மருத்துவ செலவுகளுக்கான பில்களை காட்டி பணம் கேட்டிருக்கின்றார். அதற்கு அந்த நபர் கூறியதாவது, “நான் கட்டிப் பிடித்ததால் தான் உனக்கு இப்படி ஆனது என்பதற்கான ஆதாரம் என்ன…?” எனக்கூறி சிகிச்சை செலவை ஏற்க மறுத்து விட்டார். இதனை அடுத்து இளம்பெண் கோர்ட்டை நாடியிருக்கின்றார். இது குறித்து அவருடைய மனுவை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது, “இடைப்பட்ட காலத்தில் அந்தப் பெண் வேறு எங்கும் எலும்பு உடைத்துக் கொள்ளவில்லை. எனவே, இளம்பெண்ணை இறுக அணைத்து அவர் எலும்புகள் உடைவதற்கு காரணமாக இருந்த இளைஞர் 10,000 யுவான் அந்தப் பெண்ணுக்கு வழங்கவேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். கட்டி அனைத்தது விபரீதத்தில் முடிந்து விட்டது என இழப்பீட்டை அவர் செலுத்தியுள்ளாதாக கூறப்படுகின்றது.