சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் 12 அணிகள் பங்கேற்கும் ஊடகவியலாளர்களுக்கான கிரிக்கெட் போட்டி தொடக்கவிழா நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சிவி மெய்யநாதன் கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் கிரிக்கெட் விளையாடி போட்டியை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழக முதல்வர் ஸ்டாலின் விளையாட்டுத் துறையில் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறார். செஸ் ஒலிம்பியாட் மற்றும் சர்வதேச டென்னிஸ் போட்டி உள்ளிட்டவை தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ளது என்பது பெருமைக்குரியது.
சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச டென்னிஸ் போட்டியில் எந்தெந்த அணிகள் பங்கேற்கும் என்பதைக் குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் இருந்து 2 ஹாக்கி வீரர்கள் இந்திய அணைக்கு தேர்வாகி இருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. ஹாக்கி அணிகளுக்கு சிறந்த உடற்பயிற்சிக் கூடம் மற்றும் உடற்பயிற்சியாளர்கள் இல்லாத அணிகளுக்கு உடற்பயிற்சியாளர்கள் நியமிக்கப்படும். மேலும் ஒலிம்பிக் அகடாமி அமைக்க 4 மண்டலங்களாக பிரித்து திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கும் ஆய்வு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்று அவர் தெரிவித்தார்.