சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கத்தில் அதிகாரிகள் பலர் பங்கேற்றுள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தனியார் கல்லூரியில் காவல்துறையினர் சார்பில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றுள்ளது. இந்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நாகப்பட்டினம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலும், துணை போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையிலும் நடைபெற்றுள்ளது. இதில் நுண்ணறிவு, உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம், சட்டம், மருத்துவம் ஆகிய அனைத்து துறைகளிலும் சமூக நீதி கிடைக்க வேண்டும் என்றும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கூறியுள்ளார்.
இதுகுறித்த புரிதல் மாணவர்களுக்கு அவசியம் என்றும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அவர் பேசியுள்ளார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ., தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆவன உறுப்பினர், மாவட்ட ஆதிதிராவிடர் நலம் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.