விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக தாழ்வான குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. நேற்றுமுன்தினம் இரவு தொடங்கிய மழை விடிய விடிய வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால் வாகன போக்குவரத்தில் கடும் சிரமம் ஏற்பட்டது. மேலும் தாழ்வான குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் நகர், தேவ சாமி நகர், லிங்கா நகர், கே.கே நகர், பொன் அண்ணாமலை நகர், மருதூர் நகர், ஏரிக்கரை நகர், கணேஷ் நகர், ராகவன் பேட்டை உள்ளிட்ட குறிப்பிட்ட சில பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.
மேலும் விழுப்புரம் அருகே உள்ள பெரும்பாக்கம் தொகை பாடி ஆகிய பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 100 ஏக்கர் விளைநிலங்கள் வெள்ள நீரில் மூழ்கின தொடர்ந்து பெய்து வந்த மழை கனமழையால் தென்பெண்ணை ஆறு, மலட்டாறு, சங்கராபரணி ஆறு ,ஆகிய ஆறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் அணைகளில் தண்ணீர் நிரம்பியதால் அதிக அளவு உபரிநீர் வெளியேற்றப்பட்டது. மேலும் கடந்த வாரம் பெய்த தொடர் கனமழை காரணமாக மலட்டாரில் உள்ள தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அங்கு தற்காலிகமாக பாலம் அமைத்து உள்ளனர். பம்பை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் அங்குள்ள தரைப்பாலம் மூழ்கியது. இதனால் பொண்ணங்குப்பம், அரியலூர் உட்பட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு 10 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.