தமிழக விவசாய பாதுகாப்பு சங்க அமைப்பை சேர்ந்தவர்கள் மின் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள வாகைகுளம் கிராமத்தின் வழியாக விருதுநகரில் இருந்து கோவை வரை உயர் அழுத்த மின் பாதைக்கான மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது, தற்போது மின் இணைப்பு கொடுக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் விவசாயமும், பறவை இனங்களும் பாதிக்கப்படுவதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழக விவசாய பாதுகாப்பு சங்க மாநில துணை பொதுச் செயலாளர் சின்னராசு, அமைப்பை சேர்ந்த நேதாஜி உள்பட 11 பேர் உயர் மின் கோபுரம் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து அறிந்த திருமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தகுமார் நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை மின் கோபுரத்தில் இருந்து கீழே இறங்க செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.