பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தொடர்ந்த நிலையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். ஒரு ஆண்டுக்கு மேலாக நடந்த இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சொல்லப்படுகின்றது.
இதனையடுத்து கடந்த 19 தேதி 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். வரும் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில் இந்த வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்தார். ஆனால் ஒரு சில விவசாய அமைப்புகள் குறைந்தபட்ச ஆதார விலைக்கான உத்தரவாதம் மற்றும் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு வாபஸ் பெற்றால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மேகலயா கவர்னர் சத்யபால் மாலிக் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “விவசாயிகளின் அனைத்துக் கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. எனவே அவர்களின் அடிப்படை கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலையை அரசு ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த கமிட்டி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். விவசாயிகளின் இந்த கோரிக்கையை நிறைவேற்றினால் போராட்டத்தை திரும்ப பெற்று வீடு திரும்புவார்கள். மேலும் தேவையில்லாமல் விவசாயிகள் போராட்டத்தை நீடிக்க வேண்டாம் என அறிவுறுத்துகிறேன்” என்று கூறினார்.