விவசாய துறையிலுள்ள நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு கொண்டு செல்வதே குறிக்கோள் என்று குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி ஸ்வாதிஸ்ரீ கூறினார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வு சென்ற ஜனவரியிலும், வெற்றி பெற்றவர்களுக்கான நேர்முக தேர்வு ஏப்ரல் மாதமும் நடைபெற்றது. இதையடுத்து இறுதித்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. அவற்றில் 685 பேர் தேர்ச்சியடைந்தனர். இதில் கோவையை சேர்ந்த ஸ்வாதி ஸ்ரீ தேசியஅளவில் 42வது இடத்தை பிடித்திருக்கிறார். கோவை தொப்பம்பட்டியை சேர்ந்த தியாகராஜன் -லட்சுமி தம்பதியின் மூத்த மகள் ஸ்வாதிஸ்ரீ. இவர் இளங்கலை வேளாண் பட்டதாரி ஆவார். மேலும் கோவை வேளாண்பல்கலையின் கீழ் தஞ்சாவூரில் தனியார் வேளாண் கல்லுாரியில், இளங்கலை வேளாண் பட்டம் வென்றவர்.
தற்போது ஐஏஎஸ் தேர்வை 3-வது முறையாக எழுதி வெற்றியடைந்துள்ளார். இந்நிலையில் ஸ்வாதிஸ்ரீ கூறியிருப்பதாவது “தேசிய அளவில் 42-வது இடம், தமிழக அளவில் முதலிடம் பிடித்தது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. தாத்தா -பாட்டி வேளாண் தொழிலில் ஈடுபட்டதை பார்த்து ஆசைப்பட்டு நான் வேளாண் படிப்பில் சேர்ந்தேன். அடுத்ததாக பட்டம் பெற்ற பின் குடிமைப்பணித் தேர்வு எழுதினேன். அதனை தொடர்ந்து சென்னை மனிதநேய அறக்கட்டளை, அறம் பயிற்சி மையத்தில் பயிற்சிகளை பெற்றேன்.
முதல் முறை எழுதிய தேர்வில் தான் எதிர்பார்த்த அளவிற்கு மதிப்பெண் கிடைக்கவில்லை. பின் 2ஆம் முறை தேசிய அளவில் 126-வது இடம்பிடித்து, ஐ.ஆர்.எஸ் பணிக்கு தேர்வானேன். இதனிடையில் ஐஏஎஸ் ஆகவேண்டும் என்பதால் 3-வது முறையாக தேர்வு எழுதினேன். இவற்றில் தேசிய அளவில் 42-வது இடம் பிடித்துள்ளேன். விவசாயிகளின் வாழ்வாதார பிரச்னைகளை தீர்பதற்கு முன்னுரிமை தருவேன். விவசாய துறையிலுள்ள நவீன தொழில் நுட்பங்களை கண்டறிந்து, அதனை விவசாயிகளுக்கு கொண்டு செல்வதே என் குறிக்கோள் என்று அவர் கூறினார்.