கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட சிறப்பம்சங்களை பற்றி முதல்வர் ஸ்டாலின் விளக்கியுள்ளார்.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் “கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டமானது தமிழ்நாட்டில் உள்ள 12,524 கிராம பஞ்சாயத்துகளில் 5 ஆண்டுகளில் அதை செயல்படுத்த உள்ளோம். 2021-22 ஆம் ஆண்டில் 1997 கிராம பஞ்சாயத்துகளில் ரூபாய் 120 கோடியில் இந்த திட்டம் செயல்படுத்துவதை இன்றைக்கு நான் துவங்கி வைக்கிறேன். இந்தத் திட்டத்தினுடைய முக்கிய சிறப்பம்சம் கிராம அளவில் அரசு துறைகளின் அனைத்து நலத்திட்டங்களையும் ஒருங்கிணைந்து செயல்படுவது.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் தமிழ்நாட்டில் அனைத்து சமூக மக்களையும் ஒருங்கிணைத்து முன்னேற்றம் காணவேண்டும் என்று அழைத்தவர். அந்த அடிப்படையில் இந்த திட்டமும் ஒருங்கிணைக்கும் பணியை முன்னிலைப்படுத்தும். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக கிராமத்தில் உள்ள தரிசு நிலங்களைச் சாகுபடிக்கு கொண்டுவருதல், நீர்வள ஆதாரங்களைப் பெருக்கி, சூரிய சக்தி பம்ப் செட்டுகளுடன் நுண்ணீர்ப் பாசன வசதி ஏற்படுத்துதல், வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்துதல், ஊரக வளர்ச்சித்துறையின் மூலமாக பண்ணைக் குட்டை அமைத்தல் மற்றும் கிராம வேளாண் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், கால்நடைகளின் நலன் காத்து, பால் உற்பத்தியைப் பெருக்குதல், வருவாய்த்துறையின் மூலம் பட்டா மாறுதல், இ-அடங்கல், சிறு / குறு உழவர்களுக்கு சான்று வழங்குதல். கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் அதிக அளவு பயிர்க்கடன்கள் வழங்குதல். பாசன நீர்வழித் தடங்களை தூர்வாருதல், உள்ளிட்ட கிராமப் பொருளாதார மேம்பாட்டிற்காக அனைத்துத் துறை திட்டப் பணிகளையும் ஒருங்கிணைத்து திட்டம் செயலாக்கப்படும்” என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.