விவசாயிகளை பாதிக்கக்கூடிய மின்சார திருத்த சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் மின்சார திருத்த சட்டம் 2021ன் சாரமானது மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும். வேளாண்மைக்கு வழங்கும் கட்டணமில்லா மின்சாரத்தை பறிக்கும், வீடுகளுக்கும், வேளாண்மைக்கும் , வணிக நிறுவனங்களுக்கும் மின்சாரம் கொடுப்பதையும், அதற்குக் கட்டணம் முடிவு செய்வதையும் தனியாரிடம் ஒப்படைக்க இந்த மின்சாரத் திருத்தச் சட்டம் வழி வகுக்கிறது.
இந்த சட்டத் திருத்தத்தின்படி வீட்டு முனைவரை கம்பியை இழுத்து கொடுப்பது அரசாங்கத்தின் பணி. அதை வீட்டில் உள்ள மின் கம்பியோடு இணைத்துக் கட்டணம் நிர்ணயித்து வசூலிப்பது மட்டும் தனியார் நிறுவனத்தின் பணி. இதைவிட நகைப்புக்குரியது என்று எதுவும் இருக்க முடியுமா? அதாவது, காடு, மலை எல்லாம் திரிந்து கம்பம் நட்டு, கம்பியை போட்டு, மின்மாற்றி அமைத்து, சந்து பொந்தெல்லாம் இணைப்பை ஏற்படுத்திய அரசுக்கு, வீட்டில் உள்ள மின் கம்பியோடு இணைத்துக் கட்டணம் நிர்ணயித்து வசூலிக்க முடியாதா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் இவ்வாறு உரிமம் பெறுவோர் மாநில அரசிடம் இசைவு பெற அவசியமில்லை. மாநில அரசுகளுக்கு தகவல் தெரிவித்தால் போதும் என்கின்றது இந்த சட்டத்திருத்தம். இதன் காரணமாக தான், மின்சார திருத்தச் சட்ட மசோதாவை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு, மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். எனவே மாநில உரிமையை பறிக்கும் வகையிலும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கும் வகையிலும் உள்ள மின்சார திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.