இந்தியாவில் விவசாயிகளின் போராட்டத்திற்கு கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை.
அதுமட்டுமன்றி மத்திய அரசு விவசாயிகளுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இருந்தாலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து 1200 டிராக்டர்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லியை நோக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இந்த தேசத்தின் ரத்த நாளங்கள் விவசாயிகள் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்களின் பிரச்சனைக்கு விரைவில் அமைதியான முறையில் தீர்வு காணப்படும் என்று விரும்புகிறேன். பிரார்த்திக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.