சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அந்த அறிக்கையில், “தமிழகத்தில் விளைச்சலுக்கு ஏற்றவாறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அதிக அளவில் திறக்கப்படவில்லை. ஏற்கனவே இது குறித்து அரசுக்கு பலமுறை சுட்டிக்காட்டினேன். மேலும் தென்மேற்கு பருவ மழையினால் கடந்த ஆண்டு ஏராளமான பயிர்கள் பாதிக்கப்பட்டது. அதேபோல் மழை வெள்ளத்தால் சுமார் 7 லட்சம் ஏக்கர் நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமானது.
எனவே விவசாயிகள் தங்களது உழைப்பிற்கு ஏற்ற பலனை பெறும் வகையில் அதிக அளவில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பதோடு, சாக்கு, தார்பாய், சணல் உள்ளிட்ட பொருள்களை அதிகமாக இருப்பு வைத்திருக்க வேண்டும். அதேபோல் ஆன்லைனில் பதிவு செய்தால் மட்டுமே நெல் கொள்முதல் என்பதை கைவிட்டு எளிய முறையில் விவசாயிகளின் உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைப்பதை திமுக அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.