விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6000 நிதி உதவி பெறும் திட்டத்தின் கீழ் இணைவதற்கான வழிமுறை இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள, பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் விவசாய நிதி உதவி திட்டத்தின் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6000 நிதியானது, மூன்று தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பயிரிடக்கூடிய நிலங்களை தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகளின் குடும்பங்களுக்கு, இத்திட்டத்தின் மூலம் நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் விவசாயிகள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர். ஆனால் நிறுவன விவசாயிகள், மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் உழவர் குடும்பங்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொறியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் மாதத்திற்கு 10,000 ரூபாய்க்கும் அதிகமான ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆகியோர் இந்த நிதியுதவிக்கு விண்ணப்பிக்க முடியாது.
இந்நிலையில் இந்தத் திட்டத்தில் நிறைய விவசாயிகள் இன்னும் சேராமல் இருக்கின்றனர். ஆகவே இத்திட்டத்தில் இணைய விரும்பும் விவசாயிகள் முதலில் மாநில அரசு அல்லது உள்ளூர் வருவாய் அதிகாரி பரிந்துரைத்த நோடல் அதிகாரியை அணுக வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதனை அடுத்து பொது சேவை மையங்களிலும் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்து பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் மூலமாக பி.எம் கிசான் என்ற வெப்சைட்டிலும் விவசாயிகள் நேரடியாக இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். அதன்படி திட்டத்தின் இணைவதற்கான வழி முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்ய ஆதார் கார்டு கட்டாயமாகும்.
- குடியுரிமை சான்றிதழ், நில உரிமையாளரின் ஆவணங்கள் மற்றும் ஜன் தன் வங்கி கணக்கு விவரங்கள் தேவைப்படும்.
- மேலும் ஆன்லைன் விண்ணப்பத்தின் போது, பிரதமர் கிசான் வலைத்தளத்தின் அதிகாரப்பூர்வ போர்ட்டலில் ’farmers corner’ என்ற ஒரு பிரிவு உள்ளது . இந்த போர்டல் மூலம் விவசாயிகள் தங்களை பதிவு செய்ய வேண்டும்.
- இவ்வாறு ஏற்கெனவே இணைந்த விவசாயிகள், 11ஆவது தவணை நிதியுதவியின் தற்போதைய நிலை குறித்த தகவல்களையும் இதில் தெரிந்து கொள்ளலாம்.