Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை… திருப்திகரமாக அமைந்தது… மத்திய அமைச்சர் பேட்டி…!!!

டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமைந்துள்ளது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அனைவரும் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு தரப்பினர் தங்கள் ஆதரவை செலுத்தி வருகிறார்கள். இதனை அடுத்து நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவு எழுந்துள்ளது. இந்நிலையில் வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளிடம் ஆறாம் கட்ட பேச்சுவார்த்தையை மத்திய அரசு நேற்று நடத்தியது. அதன் பிறகு மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, விவசாயிகளுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினோம். விவசாயிகள் தரப்பில் 4 கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதில் இரண்டு கோரிக்கைகளில் இருதரப்புக்கும் கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த சந்திப்பு திருப்திகரமாக அமைந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |