விவசாயிகளுக்காக பிரதான் மந்திரியின் திருந்திய பயிர் காப்பீடு திட்டம் தமிழகத்தின் 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்குவது, பண்ணை வருவாய் நிலைப்படுத்தவும், நவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிப்பதுக்கும் உதவுகிறது. ஈரோடு மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மூலமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 28 பிர்காக்கள் நடப்பு சம்பா பருவத்தில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. அறிவிக்கை செய்யப்பட்டுள்ள பிர்காக்களின் கீழ் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களை சேர்ந்த விவசாயிகளும் இந்த திட்டத்தின் பயன் பெறலாம். அறிவிக்கை செய்யப்பட்டுள்ள பிர்க்காக்களை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் பயிர் கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் பசலி ஆண்டுக்கான அடங்கல் அல்லது பயிர் சாகுபடி சான்றை கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று அதனோடு வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், சிட்டா ஆகியவற்றை கொண்டு தேசிய மேம்பாகப்பட்ட வங்கிகள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்ய வருகிற 15ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.