மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி எனப்படும் விவசாய நிதி உதவி திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணைகளாக 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டில் இந்த திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. பயிரிடக்கூடிய நிலங்களை தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகளின் குடும்பங்கள் பிரதமர் கிசான் நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம். கிராமப்புற மற்றும் நகர்புற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும்.
இந்தத் திட்டத்தில் இதுவரை 9 தவணைகள் வழங்கப்பட்டுவிட்டது. பத்தாவது தவணை இன்னும் சில வாரங்களில் வர உள்ளது.ஆனால் இந்தத் திட்டத்தில் இன்னும் நிறைய விவசாயிகள் இணையாமல் இருக்கின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக சிலரால் இணைய முடியாமல் போனது.நிதி உதவியைப் பெற விரும்பும் விவசாயிகள் முதலில் மாநில அரசு மற்றும் உள்ளூர் வருவாய் அதிகாரி பரிந்துரைத்த நோடல் அதிகாரியை அணுக வேண்டும். பொது சேவை மையங்கள் இந்தத் திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்து கொள்ளலாம்.
பி.எம் கிசான் (https://pmkisan.gov.in/) தளத்திலும் விவசாயிகள் நேரடியாக இந்த திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்ய ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, குடியுரிமை சான்றிதழ், நில உரிமையாளரின் ஆவணங்கள் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் தேவைப்படும். ஆன்லைன் விண்ணப்பத்தின் போது, பிரதமர் கிசான் வலைத்தளத்தின் அதிகாரப்பூர்வ போர்ட்டலில் ’farmers corner’ என்ற ஒரு பிரிவு உள்ளது. இந்த போர்டல் மூலம் விவசாயிகள் தங்களை பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்த விவசாயிகள் நிதியுதவி தொடர்பான அப்டேட்களுக்கு இதே வெப்சைட்டில் சென்று பார்க்கலாம். https://pmkisan.gov.in/ வெப்சைட்டில் மெனு பாரில் உள்ள ’farmers corner’ என்ற வசதியை கிளிக் செய்து அதில் ‘beneficiary list’ என்பதில் உள்நுழைய வேண்டும். உங்களது மாநிலம், மாவட்டம், பிரிவு, கிராமத்தின் பெயர் போன்ற விவரங்களைப் பதிவிட வேண்டும். பின்னர் ‘Get information’ என்பதை கிளிக் செய்து பார்த்தால் இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகளின் பெயர் விவரங்களைப் பார்க்கலாம்.