நாம் தினந்தோறும் உண்ணும் அனைத்து உணவுகளிலும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. அது பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் அமைகிறது. அதன்படி காளானில் வைட்டமின் பீ சத்து அதிகமாக நிறைந்துள்ளதால் இதயம் சம்பந்தமான நோய்களை மிக விரைவில் குணப்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் போலிக் ஆசிட் இதில் இருப்பதால் ரத்த சோகை நோய்க்கு மிகவும் நல்லது. சிறந்த கண் பார்வை, எலும்புகளின் வளர்ச்சி மற்றும் பற்களின் உறுதிக்கும் தேவையான தாமிர இரும்பு சத்துகளுடன் கூடிய கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்களும் காளானில் அதிக அளவு உள்ளன. அவ்வாறு பல்வேறு சத்துக்கள் நிறைந்த சிப்பி காளானை வளர்க்கும் முறையை பற்றி விரிவாக பார்க்கலாம்.
வைக்கோல் தயாரிப்பு:
முதலில் காளானை வளர்ப்பதற்கு நெல் வைக்கோலைக் கொண்டு உருளைப் படுக்கைகளை தயார் செய்ய வேண்டும். அதற்கு புதிய நெல் வைக்கோலை குறைந்தபட்சம் 5 செ.மீ நீளத்திற்கு வெட்டி எடுத்து, 4 முதல் 5 மணி நேரம் வரை நீரில் நன்றாக ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு அந்த வைக்கோலை எடுத்து கொதிக்கும் நீரில் ஒரு மணிநேரம் நன்றாக வேக விட வேண்டும். அடுத்து வைக்கோலை கொதி நீரில் இருந்து அகற்றி உலர்த்தி எடுத்துக்கொள்ள வேண்டும்.
காளான் படுக்கை தயாரித்தல்:
காளான் விதையிடப்பட்ட படுக்கைகள் இரண்டுக்கு ஒரு அடி அளவிற்கு 80 காஜ் கனமுள்ள பாலிதீன் பைகளில் அடுக்கு முறையில் தயாரிக்கப்படுகின்றது. அடுத்து பாலிதீன் பையின் அடிப்பகுதியை சணலால் இறுக்கமாக கட்டி அதனை உள்பக்கமாக திருப்பிவிட வேண்டும். அந்தப் பையின் அடிப்பகுதியில் 5 சென்டி மீட்டர் உயரத்திற்கு வைக்கோல் துண்டுகளை பரப்பி, அதன் மேல் பகுதியில் 300 கிராம் காளான் வித்தை தூவி விட வேண்டும்.
இதனைப் போலவே நான்கு அடுக்குகள் தயாரித்து, அதன் மேல் பகுதியில் 5 எச்.மீ வைக்கோல் பரப்பி, பையின் வாய்ப்பகுதியை சணலால் இறுக்கமாக கட்டி விட வேண்டும். பாலிதீன் மையப்பகுதியில் பென்சில் அளவுள்ள 5 முதல் 10 துளைகள் போடவேண்டும்.
காளான் வித்து பரவும் முறை:
நாம் இப்போது தயாரித்த உருளைப்படுக்கைகளை வயரில் கட்டி தொங்க விட வேண்டும். பூசண விதைகள் படுக்கையில் பரவுவதற்கு 15 நாட்கள் வரை ஆகும். அதன்பிறகு காளான் தோன்றும் அறைக்கு படுக்கைகளை மாற்றம் செய்ய வேண்டும்.
காளான் அறை தயாரித்தல்:
இப்போது காளான் பூசணம் முழுமையாக பரவி ஒரு வாரத்திற்குள் பையைக் கிழித்துக்கொண்டு தானாக வெளியே வரும். காளான் மொட்டு தோன்றிய மூன்று நாட்களில் பெரியதாகிவிடும். அவற்றை அறுவடை செய்த பிறகு பாலீதீன் பையை முழுமையாக நீக்கி விட வேண்டும். அதன்பிறகு அறையின் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை தேவையான அளவு பராமரிக்க மணலில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.
காளான் அறுவடை:
இப்போது காளான்களை அறுவடை செய்து முடித்த பிறகு படுக்கைகள் மீது தண்ணீர் தெளித்து விட வேண்டும். ஒரு வாரத்திற்குள் மீண்டும் காளான் அறுவடைக்கு தயாராகும். இதனைப் போலவே மூன்று முறை நீங்கள் அறுவடை செய்யலாம். நீங்கள் ஒரு படுக்கை தயார் செய்வதற்கு 500 கிராம் வைக்கோல் பயன்படுத்தினால் 900 கிராம் மகசூல் உங்களுக்கு கிடைக்கும்.
இந்த முறையில் காளான் வளர்ப்பு செய்து அதிக மகசூல் பெற்று விவசாயிகள் பயனடையும் முடியும். இது மிகவும் சுலபம் தான். இதனை வருடம் முழுவதும் நீங்கள் உற்பத்தி செய்யலாம். ஆனால் கோடை காலத்தில் மட்டும் 30 முதல் 40 சதவீதம் வரை மகசூல் குறைவாக கிடைக்கும்.