திருப்பூரில் “தாட்கோ திட்டத்தின்” மூலம் மானியத்துடன் விவசாயம் உபகரணங்கள் வாங்குவதற்கு ஆதிதிராவிடரும், பழங்குடியினரும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருப்பூர் மாவட்டம் கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தாட்கோ திட்டத்தின் வாயிலாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு பிவிசி., பைப் வாங்குவதற்கு ரூபாய் 15 ஆயிரம், புதிய மின்மோட்டார் வாங்க ரூபாய் 10 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிப்பதற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருப்பதுடன் குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இந்த திட்டத்தில் பயன்பெறாத எஸ்.சி., எஸ்.டி., விவசாயிகளுக்கும், சிறு-குறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கும் துரித மின் இணைப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து நிலுவையில் இருப்பவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். அத்துடன் ஏற்கனவே தாட்கோ நிலம் வாங்கும் திட்டம், நில மேம்பாட்டுத் திட்டம் மற்றும் துரித மின் இணைப்புத் திட்டம் போன்ற திட்டங்களில் பயன்பெற்று இருந்தாலும் இத்திட்டத்தில் பயன்பெறலாம். ஆனால் மின் மோட்டார் திட்டத்தில் மானியம் பெற்றவர்கள், வேளாண், தோட்டக்கலைத் துறை திட்டங்களில் மின் மோட்டார் மானியம் பெற்றவர்கள் இந்த திட்டத்தின் கீழ் மானியம் பெற முடியாது.
எனவே தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்களது ஜாதிச்சான்று, வருமானச் சான்று, குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று, சிட்டா, பட்டா, அடங்கல் பதிவேடு, புலப்பட வரைபடம், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து பெற்றப்பட்ட விலைப்புள்ளி போன்றவற்றை தாட்கோ இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். இது குறித்த கூடுதல் விபரங்களுக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், அறை எண் 503-ல் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளரை 0421-2971112 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.