விவசாயம் தான் இந்தியாவின் முதுகெலும்பு என்று காந்தியடிகள் கூறியுள்ளார். ஆனால் விவசாயிகள் இயற்கையின் சூழ்நிலை மாறுபட்டால் தங்களுடைய விளைப்பொருட்களுக்கு தகுந்த விலை கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி ஒருவர் எந்தவித இடைத்தரகரும் இல்லாமல் சாதித்து வருகிறார். என்னுடைய விளைப்பொருட்களை வீணாகாமல் மக்கள் வீட்டிற்கு எடுத்து செல்வதால் வழக்கத்தை விட 20% லாபம் கிடைப்பதாக இயற்கை விவசாயி பகவத் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
விவசாயிகளால் நாசிக் நகரில் ஆரம்பிக்கப்பட்ட பண்ணையில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகளின் ஒத்துழைப்புடன் வாரத்தில் 2-3 நாட்கள் “வசுந்தரா செந்திரியா ஷெட்மல் சம்படக் ஷெட்கரி காட்” என்ற பெயரில் நடக்கும் சந்தையில் விவசாயி பகவத் தன்னுடைய விளை பொருட்களை விற்பனை செய்து வருகிறார். வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை நிறுவனம் கடந்த 2016-ஆம் ஆண்டில் அம்மாநில அரசுடன் இணைந்து பல விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தில் பயிற்சி வழங்கியுள்ளது. விவசாயி பகவத்-ம் அதில் பங்கேற்றார்.
ஆனால் அவர் முதலில் நகர்ப்புறங்களில் தன் விளை பொருட்களை விற்க ஆசைப்பட்டுள்ளார். இந்த நிலையில் சரியான நபரை அவர்களுடைய குழுவுக்கு வழிகாட்டுவதற்காக தேடிய போது ஜோசப் பிண்டோ என்ற ஓய்வுபெற்ற ராணுவ வீரரை பகவத் சந்தித்துள்ளார். பின்னர் கடந்த 2017-ஆம் ஆண்டில் அவருடைய உதவியுடன் ஜூஹு நகரின் பூங்காவில் விவசாயி பகவத் தன்னுடைய முதல் கடையை அமைத்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் பகவத் அவர்களுடைய விவசாய சந்தையில் வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ள ஏதுவாக வாட்ஸ்அப் குழு ஒன்றையும் உருவாக்கியுள்ளார். அந்த குழுவில் பல சந்தேகங்களுக்கும் விடை அளிக்கப்படுகிறது.
மேலும் பகவத் தான் எடுத்துச் செல்லும் பொருட்களின் படங்களை வார சந்தைக்கு ஒரு நாள் முன்னதாக வாட்ஸ்அப் குழுவில் அனுப்புகிறார். எந்த இடைத்தரகரும் இவர்களுடைய சந்தையில் கிடையாது. மேலும் இயற்கை காய்கறிகளுக்கு நகரப் பகுதிகளில் அதிக தேவை உள்ளதால் நியாயமான விலைக்கு முடிந்தவரை விற்கிறார்கள். இவர்களின் தரத்திற்கேற்ப நாளுக்கு நாள் வாடிக்கையாளர்களும் அதிகரித்து கொண்டே வருகிறார்கள். கடினமாக உழைப்பை கொடுத்தாலும் பெரும்பாலான விவசாயிகள் இயற்கையான விளை பொருள்களுக்கு நியாயமான விலையை பெறுவதில்லை என்ற கூற்றை மாற்றி பகவத் மற்ற விவசாயிகளுக்கு முன்னுதாரணமாக உள்ளார்.