திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் பயிர்களை காப்பீடு செய்வதற்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். நடப்பு ஆண்டில் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் சம்பா, தாளடி பருவங்களில் சாகுபடி செய்துள்ள நெற்பயிர் காப்பீடு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. காப்பீடு கட்டணமாக ஒரு ஏக்கருக்கு ரூ.488.25 செலுத்த வேண்டும். சம்பா மற்றும் தாளடி நெற்பயிரை காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15ஆம் தேதி கடைசி நாள் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களும் இந்த திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்ட விவசாயிகள் பதிவு செய்து வருகின்றனர்.
பயிர் கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக விவசாயிகள் நெல் பயிர் காப்பீடு செய்துகொள்ளலாம். திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.எனவே விவசாயிகள் இறுதி நேரம் வரை பிரீமியம் செலுத்த காத்திருக்காமல் இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் முன்னரே விரைவில் இந்த திட்டத்தில் தங்களது பெயர்களை காப்பீடு செய்துகொள்ள ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.