மண் புழு உரம் திடக்கழிவு மேலாண்மையில் முக்கியமான பங்கு வகிக்கிறது. இயற்கையில் கிடைக்கக்கூடிய விவசாயக் கழிவுப் பொருட்களான சாணம், இலை, தழை ஆகியவற்றை உள்கொண்டு எச்சங்களை சிறு சிறு உருண்டைகளாக மண்புழுக்கள் வெளியேற்றுவதையே மண்புழு உரம் என்று கூறுகிறோம். இவற்றில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து போன்ற அனைத்தும் இருக்கிறது. மேலும் 45-60 நாளில் மண்புழு உரமானது உற்பத்தியாகிவிடும்
மண்புழு உரம் தயாரிப்பது எப்படி?
# உரம் தயாரிக்க விளைநிலங்கள், தோட்டம் போன்ற இடங்களில் நிழலான இடத்தை தேர்வு செய்யவும்.
# இதையடுத்து நிழலான இடத்தில் 15 அடி நீளம் உள்ள மூங்கில் கம்பு 4 நட்டு பாலிதீன் பையை சுற்றி தொட்டி போன்ற அமைப்பில் உருவாக்கவும். (அல்லது) பாலிதீன் அடிப்படையில் சில்பாலின் என்ற பிளாஸ்டிக் பை ஒன்றை 12 அடி நீளம், 4 அடி அகலம், 3 அடி உயரம் என்ற அளவில் தயார் செய்துகொள்ள வேண்டும்.
# இந்த பிளாஸ்டிக் பையிக்குள் 1 டன் அளவுள்ள மாடு, பன்றி, ஆடு, வாத்து கழிவுகளும், பருத்தி, வைக்கோல், சோளம், கருப்பு தோகை, இலை தழைகள், சமையலறை கழிவுகள் போன்றவற்றையும் சாணம் மற்றும் கழிவுகள் தலா 1 அடுக்கு என்ற முறையில் 6 அடுக்குகளாக போட்டு நிரப்பவும்.
# தொட்டியின் மேல் பகுதியை தென்னை (அல்லது) பனை ஓலைகள் (அல்லது) கோணிப்பைகள் கொண்டு மூடிவைக்க வேண்டும். அதன்பின் சாக்கு (அல்லது) நைலான் வலை கொண்டு மூடி விலங்குகள் மற்றும் பறவைகள் கிளறா வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.
# காலை, மாலை என இருவேளைகளில் ஈரப்பதம் வரும் அளவுக்கு தண்ணீர் ஊற்றவும்.
# டன் ஒன்றுக்கு 1 கிலோ மண் புழுகள் விதம் போட்டு வைத்தால் 45 நாட்களில் உரம் உருவாகும்.
# அவ்வாறு செய்வதன் வாயிலாக 600 கிலோ மண் புழு உரம் உருவாக்க முடியும். இதற்கான முதலீடு 800 ரூபாய் மட்டுமே ஆகும்.