புதிய வேளாண் சட்டங்கள், ஓரிரு ஆண்டுகளில் பலன் அளிக்காவிட்டால், சட்டங்களில் தேவையான திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ளும் என்று மத்திய அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், தலைநகரில் போராட்டம் நடத்துவது, நமது சொந்த மக்களான விவசாயிகள் என்றும், விவசாயிகள் மீது மத்திய அரசு மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளதாகவும், விவசாயிகளின் நலனுக்கு எதிராக பிரதமர் திரு. மோதி தலைமையிலான அரசு எதையும் செய்யாது என்றும் கூறினார்.
புதிய வேளாண் சட்டங்களை, சோதனை அடிப்படையில் செயல்படுத்தி பார்ப்போம் என்றும், ஓரிரு ஆண்டுகளில் பலன் கிடைக்காவிட்டால், சட்டங்களில் தேவையான திருத்தங்களை, மத்திய அரசு நிச்சயம் மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார். இதனிடையே, புதிய வேளாண் சட்டங்களின் முக்கியத்துவத்தை விவசாயிகள் புரிந்து கொள்வார்கள் என்றும், அதன் மூலம் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் என்று நம்புவதாகவும், மத்திய வேளாண் அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.