இலைப் புள்ளி நோய் அறிகுறிகள்:
வாழை இலைகளில் முதலாவதாக மஞ்சள்நிறப் புள்ளிகளானது உருவாகி, இலை பழுப்புநிறக் கோடுகளாக மாற்றமடைந்து நடுபகுதி சாம்பல் நிறமாக இருக்கும். அவ்வாறு பாதிக்கப்பட்ட இலைகள் நுனியில் இருந்து கருகி முழுவதும் காய்ந்து விடுவதோடு, காய்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு பிஞ்சிலேயே பழுத்து வீணாகிவிடும்.
தடுக்கும் முறைகள்:
இதுபோன்று பாதிக்கப்பட்ட இலைகளை வெட்டி எரித்து விட வேண்டும். 1 லிட்டர் தண்ணீரில் பூசணக் கொல்லிகளான கார்பன்டாசிம் ஒரு கிராம் (அல்லது) மாங்கோ செப் 2 கிராம் (அல்லது) புரோப்பிகோனசோல் 1 மில்லி மற்றும் ஒட்டும் திரவங்களான சான்டோவிட் (அல்லது) டீப்பால் ஆகியவற்றை கலந்து தெளிக்க வேண்டும்.
கிழங்கு அழுகல் நோய் அறிகுறிகள்:
வாழையின் நடுக் குருத்து அழுகி, வளர்ச்சி குன்றி அதற்கு சற்றுமுன் தோன்றிய இலைத் தண்டிற்குள் சொருகியது போன்று காணப்படும். கிழங்கு ஆனது அழுகி பார்மலின் நாற்றத்தைப் போல் தோற்றுவிக்கும். மகத்தை லேசாக காய்ந்து தண்டுப்பகுதி கிழங்கில் இருந்து பிரிந்து கீழே விழுந்து பின், கிழங்கு மட்டுமே மண்ணிலேயே இருக்கும்.
தடுக்கும் முறைகள்:
நோய் தாக்கப்படாத தோட்டங்களிலிருந்து வாழைக் கன்றைத் தேர்வு செய்யவும். கிழங்கை நடுவதற்கு முன்பாக 0.1 சதம் எமிசான் 1 லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் என்ற அளவில் கரைசலை நனைத்து பின் நடவு செய்யலாம். வெப்பக் காலத்தில் நன்றாக நீர் பாய்ச்சியும், குளிர் காலத்தில் நீர் தேங்காதவாறும் செய்ய வேண்டும். அதன்பின் நோய் தாக்கிய வாழைக்கு 0.1 எமிசான் கரைசலை 1 முதல் 2 லிட்டர் வரை மண்ணில் ஊற்ற வேண்டும். மக்கிய தொழு உரம், வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றை மண்ணில் இடவேண்டும். அத்துடன் 1 லிட்டர் நீருக்கு 3 கிராம் பிளீச்சிங் பவுடர் எனும் விகிதத்தில் கலந்து 1-2 லிட்டர் வரை ஒரு வாழைக்குக் கொடுக்கலாம்.
முடிக்கொத்து நோய்
வைரஸ்களால் ஏற்படும் இந்த நச்சு உயிரி நோயை அசுவினிகள் பரப்புகிறது. அவ்வாறு நோய்த் தாக்கிய மரங்களின் இலைகள் சிறுத்து, மஞ்சள், கரும்பச்சை கோடுகள் மற்றும் புள்ளிகளுடன் அடுக்கடுக்காக வெளியே வரும்.
தடுக்கும் முறைகள்
தாக்கப்பட்ட மரங்களை அழித்து அகற்ற வேண்டும். மீதைல் டெமட்டான், ரால்போமிடான் (அல்லது) மோனோகுரோட்டோபாஸ் பூச்சிக்கொல்லிகளில் ஏதாவது ஒன்றை 1 லிட்டர் நீருக்கு 1 மில்லி என்ற விகிதத்தில் கலந்து 2 மாத இடைவெளியில் 3 முறை தெளிக்கவேண்டும். அத்துடன் மோனோகுரோட்டோபாஸ் 1 மில்லி மருந்தை 4 மில்லி தண்ணீரில் கலந்து 45 நாள் இடைவெளியில் 3-வது மாதத்தில் இருந்து ஊசி வாயிலாக தண்டுப்பாகத்தில் செலுத்த வேண்டும்.