மத்திய அரசின் விவசாய நிதியுதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டிற்கு 6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதை பெறுவதற்கு வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும். 2 ஹெக்டேருக்குக் கீழ் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு 6000 ரூபாய், மூன்று தவணைகளாக கொடுக்கப்படும். விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணைகளாக 6 ஆயிரம் கொடுக்கும் நிதியுதவி திட்டத்தை பிரதமர் மோடி 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்கி வைத்தார்.
நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2, 000 வீதம் ஆண்டிற்கு ரூ. 6, 000 வேளாண் இடுபொருட்கள் வாங்கும் பொருட்டு ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. பயிரிடக்கூடிய நிலங்களைத் தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகளின் குடும்பங்கள் பிரதமர் கிசான் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் மத்திய அரசு தற்போது இந்த திட்ட நிதி விடுப்பில் மாற்றம் செய்துள்ளது. இதுவரை இந்த நிதியானது விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு விடுவிப்பு செய்துவந்த நிலையில், இனி திட்ட நிதியானது ஆதாரத்தின் அடிப்படையில் தான் விடுவிக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு இந்த திட்டத்தின் மூலமாக இதுவரை 10 தவணைகள் விடுவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டது. தற்போது 11வது தவணை தொகை ஏப்ரல் 2022 முதல் ஜூலை 2022க்குள் பெறுவதற்கு தங்கள் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. எனவே ஆதார் எண்ணை வங்கி கணக்கு எண்ணுடன் இணைக்கப்படாமல் உள்ள விவசாயிகள் உடனடியாக தங்களது ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைத்துக் கொள்ள வேண்டும். மேலும் இதற்கான கால அவகாசம் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.