ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலக கூடுதல் வளாகத்தில் நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனர் மோனிகா ராணா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தன பிரியா, தோட்டக்கலை இயக்குனர் ஷிபிலா மேரி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் வாஞ்சிநாதன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் கூட்டத்திற்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க ஆவண செய்யப்பட்டது.
இதனையடுத்து 67 கோரிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது. இந்த கூட்டத்தில் நீலகிரி மாவட்ட கலெக்டர் கூறியதாவது, “ஊட்டி உழவர் சந்தையில் தோட்டக்கலை துறை சார்பாக மூலிகை மற்றும் அலங்கார செடிகள் விற்பனை செய்வதை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தோட்டக்கலை துறை மூலமாக தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் தேனீ பெட்டிகள் கூடுதலாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் மூலமாக இயற்கை உரங்கள் திரவ வடிவில் அதிக அளவில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்படும்” என அவர் கூறியுள்ளார்.