டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு நடிகை பிரியங்கா சோப்ரா ஆதரவு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் நடு நடுங்கும் குளிரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவை செலுத்தி வருகிறார்கள்.
இதனையடுத்து விவசாயிகளுடன் மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் இந்த போராட்டம் கட்டாயம் தொடரும் என விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நாளை பாரத் பந்த் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி நடிகை பிரியங்கா சோப்ரா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “விவசாயிகள் நமது உணவு வீரர்கள். விவசாயிகளின் அச்சங்கள் நீங்க பட வேண்டும். விவசாயிகளின் நம்பிக்கையை பூர்த்தி செய்ய வேண்டும். வளர்ந்துவரும் ஜனநாயகம் என்ற வகையில்,இந்த நெருக்கடி விரைவில் தீர்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.