டெல்லியில் போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்த கோரிய வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பல்வேறு கட்ட போராட்டங்களை விவசாயிகள் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு தரப்பினர் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை அப்புறப்படுத்த கோரிய வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லி கூலி விவசாயிகள் நுழைவதை தடுப்பது யார்? சாலைகளை மூடியது யார்? என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் பொது நல வழக்கில் விவசாய சங்கங்கள் எதிர் மனுதாரர்களாக இணைய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள விவசாய சங்க பிரதிநிதிகள் அடங்கிய குழுவை ஏற்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தவும் அறிவுறுத்தியுள்ளது.