டெல்லியில் 14 மாதங்களாக நடந்து வரும் போராட்டத்தை கைவிடுவதாக விவசாயிகள் இன்று முடிவு செய்துள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்று டெல்லியின் எல்லைப் பகுதியில் 14 மாதங்களாக விவசாயிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து விவசாயிகள் சில கோரிக்கைகளை மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கும் வரை, போராட்டத்தை கைவிடப் போவதில்லை என விவசாய சங்கங்கள் அறிவித்தனர். இந்த நிலையில்,போராட்டத்தின் பயனாக வேளாண்சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் சம்யுக்தா கிசான் மோர்ச்சா விவசாயிகளின் தலைவர் குர்னாம் சிங் சாருனி பேசுகையில், ஜனவரி 15-ஆம் தேதி மறு ஆய்வுக் கூட்டத்தை நடத்துவோம்.
அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தை தொடங்குவோம் என்று தெரிவித்தார். இதையடுத்து டெல்லி ஹரியானாவில் உள்ள சிந்துவில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தில் கூடாரங்களை அகற்ற ஆரம்பித்துள்ளனர். மேலும் விவசாயிகள் அவர்களுடைய வீட்டிற்கு புறப்பட தயாராகி உள்ளதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் இன்று அவரவர் ஊருக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.