போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுவது குறித்த முடிவுகளை மாநில அரசு எடுக்கும் என வேளாண் மந்திரி கூறியுள்ளார்.
3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டுமென விவசாயிகள் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தனர்.இதனைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குளிர்கால கூட்டத் தொடரின் போது 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்பட்டன. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் கைவிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விவசாயிகள் குறிப்பிட்ட விவசாயப் பொருட்களுக்கான அதிக பட்ச ஆதார விலை மற்றும் போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளுக்கு தகுந்த நஷ்ட ஈடு மேலும் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுவது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை வாபஸ் பெற மறுத்து விட்டனர்.
இதனைத் தொடர்ந்து மத்திய அரசு இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தது. இதற்காக விவசாயிகளின் ஒருங்கிணைந்த போராட்டத்தை நடத்தி வரும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்புக்கு மத்திய அரசு கடிதம் ஒன்றை எழுதி இருந்தது. அந்த கடிதத்தில் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், மற்றும் அரியானா போன்ற மாநிலங்களில் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்யும் எனவும், மேலும் டெல்லியில் போடப்பட்ட வழக்கு கண்டிப்பாக திரும்பப் பெறப் படும் எனவும் அந்த கடிதத்தில் எழுதி இருந்தது. இதனை தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.
இதுகுறித்து வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் கூறியதாவது, பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றது குறித்து அனைத்து விவசாயிகளும் வரவேற்பு அளித்துள்ளனர். இது விவசாயிகள் மீது உள்ள மரியாதையை காட்டுகிறது என கூறினார். மேலும் பேசிய அவர் சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட துறைகள் மாநில அரசுகளின் கையில் இருப்பதால் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுவது குறித்து மாநில அரசு முடிவெடுக்கும் என கூறினார்.