தென்மேற்கு பருவமழையால் பாதிக்கப்படும் குருவைப் பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் காவிரி, வைகை, தாமிரபரணி, தென்பெண்ணை ஆறுகளில் அதிக அளவில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அருகில் உள்ள வயல்களில் வெள்ளநீர் புகுந்து நீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் இருந்து அறிக்கைகள் பெறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆற்று வெள்ள நீர், தென்மேற்கு பருவமழையால் பாதிப்படையும் பயிர்களுக்கு எவ்வித விடுதலும் இல்லாமல் உரிய நிவாரணம் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு அவர்களுடைய நலன் பாதுகாக்கப்படும். குருவை நெல், போன்ற வேளாண் பெயர்களுக்கும் வாழை போன்ற தோட்டக்கலை பயிர்களுக்கும் தற்போது பெய்து வரும் அதிக பருவமழை போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிப்பு ஏற்பட்டால் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கடந்த வருடத்தை போல வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.