கடலூர் மாவட்டத்திலுள்ள நெல்லிக்குப்பம் அருகில் வான்பாக்கத்தில் வசித்து வருபவர் விவசாயி காத்தவராயன் மகன் அருள் (42). இவர் சென்ற 21/01/2017 அன்று மனைவி செந்தாமரையுடன் வீட்டுக்கு அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த உறவினர் சுப்பிரமணியன் மகன் பிரகாஷ் (29) என்பவர் குடித்து விட்டு சத்தம்போட்டார். இதனை பார்த்த அருள் அவரை கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த பிரகாஷ், அருளை கரும்பு வெட்டும் கத்தியால் தாக்கினார்.
இதில் காயம் அடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து பிரகாஷ் மீண்டும் வந்து அவரை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பிரகாஷை கைது செய்தனர். இவ்வழக்கு கடலூர் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணைகள் அனைத்தும் நேற்று முடிவடைந்த நிலையில், நீதிபதி வனஜா தீர்ப்பளித்தார். அதாவது, இவ்வழக்கில் பிரகாஷ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 2 வருடம் சிறைதண்டனையும், ரூபாய்.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.