விவசாயியை கொன்று உடல் புதைக்கப்பட்டுள்ளதா? என்று மனைவியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்துள்ள நடுவீரப்பட்டு அருகில் சத்திரம் எஸ்.புதுக்குப்பம் கிராமத்தில் வசித்து வந்தவர் விவசாயி ராஜசேகர்(47). இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளார்கள். இந்நிலையில் ராஜசேகர் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன் காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் விஜயலட்சுமிடம் ராஜசேகர் எங்கே என்று கேட்டார்கள். அதற்கு அவர் வெளியூர் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. நானும் அவரை தான் தேடி கொண்டு இருக்கிறேன் என்று கூறினார். ஆனால் இதுகுறித்து விஜயலட்சுமி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை. இதனால் சிலருக்கு விஜயலட்சுமி மீது சந்தேகம் ஏற்பட்டது.
இது தொடர்பாக நடுவீரப்பட்டு காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இத்தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் காவல்துறையினர் விஜயலெட்சுமியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் முன்னும் பின்னும் முரணாக பதிலளித்தார். விஜயலட்சுமியை வீட்டிற்கு அருகில் இருந்த விளை நிலத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது நிலத்தில் சந்தேகப்படும்படி சில தடயங்கள் இருந்தது. இதை பார்த்த காவல்துறையினருக்கு ராஜசேகர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது, ராஜசேகர் காணாமல் போன விவகாரத்தில் மர்மம் இருக்கிறது. விஜயலட்சுமி முன்னும் பின்னும் முரணாக பதில் அளிக்கிறார். ராஜசேகரை அடித்து கொலை செய்து புதைத்து இருக்கலாம் என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது. எனவே இன்று திங்கள் கிழமை வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் சந்தேகம் இருக்கின்ற இடத்தை தோண்டிப் பார்த்தால் மட்டுமே ராஜசேகர் கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியவரும். காணாமல் போன ராஜசேகர் பற்றி முழுமையான தகவல் தெரியும் என்று தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.