விவசாயியை வெட்டி கொலை செய்த சம்பவத்தில் உறவினர்கள் குற்றவாளியை கண்டுபிடிக்க கோரி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தின் செங்கம் அடுத்த மேல்புழுதியூர் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். 51 வயதான இவர் விவசாயம் செய்கிறார்.இவர் மனைவி வசந்தா.இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நடராஜன் வீடு திரும்பவில்லை.இந்நிலையில் நேற்று காலை அவரது விவசாய நிலத்தில் கழுத்துப்பகுதி அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இதைக்குறித்து தகவல் அறிந்ததும் செங்கம் காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்ல நடவடிக்கை மேற்கொண்டபோது நடராஜனின் உறவினர்கள் உடலை எடுக்கவிடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அவர்கள் குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன் வைத்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடராஜனின் உறவினர்களிடம் குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதனை தொடர்ந்து உறவினர்கள் கலைந்து செல்ல நடராஜனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் செங்கம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.