தமிழகத்தின் பயிர் கடன் தள்ளுபடிக்கான ரசீது நாளை முதல் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறது. அதன்படி கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து பயிர்க் கடன் தள்ளுபடிக்கான ரசீதை நாளை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி வழங்குகிறார். பயிர் கடன் தள்ளுபடி காண அரசாணை ஏற்கனவே வெளியான நிலையில் நாளை முதல் ரசீது வழங்கப்படுகிறது.