டிராக்டரில் இருந்து தவறி விழுந்து மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ரிஷிவந்தியம் அருகே கொங்கணங்கொள்ளை கிராமத்தில் செந்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌதம் என்ற மகன் இருந்துள்ளான். இவர் அரசு மேல்நிலை பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இதே பகுதியில் வசிக்கும் கண்ணன் என்பவருடன் கௌதம் விவசாய நிலத்திற்கு டிராக்டரில் சென்றுள்ளார். இந்நிலையில் கண்ணன் விவசாய நிலத்தில் டிராக்டரை ஓட்டிக் கொண்டிருக்கும் போது திடீரென நிலைத்தடுமாறி கௌதம் கீழே விழுந்துள்ளார்.
அப்போது டிராக்டர் கௌதமின் மீது ஏறி இறங்கியது. இந்த விபத்தில் கௌதமுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் கௌதமை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே கௌதம் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து கௌதமின் உடல் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இதுகுறித்து ரிஷிவந்தியம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.