தமிழகத்தில் கடந்த 1942 முதல் 1947 வரை சுமார் நான்கு முறை மே மாதம் விவசாய பணிகளுக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சுமார் 77 வருடம் கழித்து இந்த வருடம் மே மாதம் மேட்டூர் அணையில் இருந்து விவசாய பணிகளுக்காக தண்ணீர் திறந்து விடப்பட இருக்கின்றது. இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மேட்டூர் அணையை விவசாய பணிகளுக்காக திறந்துவிட்டு இருக்கின்றார். இதன் காரணமாக விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். டெல்டா மாவட்டத்தை பொறுத்தவரை சுமார் 16 லட்சம் ஏக்கர் சாகுபடி பணிக்காக இருக்கின்றது.
மேலும் இந்த 16 லட்சம் ஏக்கருக்கு சுமார் 30 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட வேண்டும். அவ்வாறு திறந்தால் தான் விவசாயிகள் நடவு பணிகளை சீராக மேற்கொள்ள முடியும் என தெரிவித்து வருகின்றனர். கடைமடை பகுதிவரை தண்ணீர் செல்வதற்கான அனைத்து வாய்க்கால்களும் தூர்வாரப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தட்டுப்பாடு இல்லாமலும் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுபற்றி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது கடந்த வருடம் நல்ல மழை பெய்தது விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.
மேலும் மழை வந்தாலும் விவசாயி அழிந்து போகிறான். வராவிட்டாலும் விவசாயி அழிந்து போகின்றான். இந்த நிலையில் அதிக மழை பெய்ததன் காரணமாக கடந்த வருடம் பாதி விவசாயம் மட்டுமே கிடைத்தது. தற்போது மேட்டூரில் தண்ணி வந்து இருக்கின்றது. ஆனால் விவசாயிகள் தங்களது நிலங்களில் உளுந்து மற்றும் பருத்தி சாகுபடி செய்திருகின்றனர். அந்த பருவத்திற்கு இன்னும் ஒரு மாதம் தண்ணீர் இல்லாமல் இருந்தால்தான் சாகுபடியை எடுக்க முடியும். இந்த நிலையில் தண்ணீர் திறந்து விடுவதில் மகிழ்ச்சியாக இருந்தாலும் பல்வேறு இடங்களில் வாய்க்கால்கள் பாதி வெட்டியும் வெட்டபடாமலும் இருக்கின்றது. மேலும் தூர் வாரினால் தான் எங்களுக்கு மூன்று அல்லது நான்கு மாதத்திற்கு வேண்டிய அளவு தண்ணீர் கிடைக்கும் தூர்வாரும் வரை தண்ணீரை குறைந்த அளவே விடுவித்து கடலுக்கு போகாமல் பாதுகாத்து கொள்ள வேண்டும்.
இந்த நிலையில் பொட்டாஸ் 900 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால் தற்போது 1,500 ரூபாய்க்கு சென்றுள்ளது. கடையில் சென்று கேட்டால் 2000 ரூபாய் கேட்கின்றனர். யூரியா கேட்கப் போனால் பூச்சிமருந்து உட்பட பல்வேறு பொருட்களை இணைத்து 500 ரூபாய் கொடுத்தால் தான் தருவேன் என கூறுகின்றார்கள். எங்களை காப்பாற்ற வேண்டியது அரசின் கடமையாகும். இதற்காக உரம் கிடைக்க உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு மானியம் கொடுத்து விலைகளை குறைக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அவர் பேசும் போது,கோடையில் விவசாய தொழிலாளர்கள் வேலை இல்லாமல் இருந்தனர். அதற்காக 100 நாள் வேலை திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது 365 நாளும் அந்த வேலை கொடுப்பதால் விவசாயிகளுக்கு நடவு செய்யக் கூட ஆட்கள் இல்லை. அதனால் அவர்களை நடவு மற்றும் அறுவடை நேரங்களில் விவசாய பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ள அனுப்ப வேண்டுமென தெரிவித்திருக்கின்றார்.