விவசாயத்தை பற்றி விழிப்புணர்வு பிரசாரம் செய்ய இளம் தம்பதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர்வரை கார் பயணம் செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பகுதியில் வசித்து வருபவர் அசோக். இவரது மனைவி பிரபா இந்த தம்பதியினருக்கு 4 வயதில் பிரபாஸ் என்ற மகனும் உள்ளான். திருப்பூரில் உள்ள சாயம் தயாரிக்கும் நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அசோக்குக்கு ஊர் ஊராக பயணம் செய்வதில் ஆர்வம் இருந்துள்ளது. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பயணம் செய்வதை பற்றிய விருப்பத்தை மனைவியிடம் தெரிவித்துள்ளார். பின்னர் குடும்பத்துடன் பயணம் செய்ய சம்மதம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அவர் பயணம் செய்ய தேவையான பணிகளை தொடங்குவதற்காக வேலையில் இருந்து விலகினார். வேலை பார்த்து வந்த பணத்தை கொண்டு கார் வாங்கியுள்ளார். இதற்காக காரில் பின் இருக்கைகளை அகற்றி அதில் படுக்கை வசதியும், சமையல் செய்ய தேவையான அடுப்பு, பாத்திரங்கள் வைக்கவும் வடிவமைப்பு செய்துள்ளார். அவர்கள் 100 நாட்களுக்குள் பயணத்தை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
அவ்வகையில் கடந்த ஜனவரி மாதம் 4 வயது மகனுடன் தங்களது பயணத்தை திருப்பூரில் இருந்து தொடங்கியுள்ளனர். இந்த விழிப்புணர்வு பயணம் குறித்து அசோக் மற்றும் பிரபா கூறியது, இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் உள்ள மக்களுக்கு விவசாயம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டோம். திருப்பூரில் இருந்து புறப்பட்டு கேரளா, கோவா, மகாராஷ்டிரா போன்ற பல்வேறு மாநிலங்களுக்கு சென்றோம்.
அதன் பின்பு உத்தரபிரதேசம், ஒடிசா, ஆந்திரா, அசாம், வழியாக மீண்டும் சென்னை வந்துள்ளோம். இப்போது புதுச்சேரி வழியாக ராமேசுவரத்திற்கு சென்று அங்குள்ள உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடம் சென்று கன்னியாகுமரியில் இந்த பயணத்தை முடிக்க திட்டமிட்டுள்ளோம். 15 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் இந்த காரில் பயணம் மேற்கொண்டுள்ளோம். 100 நாட்களுக்கு முன்னதாகவே பயணத்தை முடிப்போம் என நம்புகிறோம் என்று கூறியுள்ளனர்.