கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை குறித்து விவாகரத்து பெற்றுள்ளனர். இந்நிலையில் மனைவியின் பராமரிப்பில் இருக்கும் குழந்தையை சந்திக்க கோரி கணவன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிரிந்து வாழும் தம்பதியர் தங்களை கணவர் மனைவியாக கருதாமல் விருந்தினராக கருதி குழந்தையுடன் சேர்ந்து அவர்களுடன் உணவருந்த வேண்டும். அதுமட்டுமில்லாமல் குழந்தையை காண வரும் முன்னாள் கணவருக்கு தேநீர் வழங்கி உபசரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் அரியானா மாநிலம் குருகிராமில் வேலை பார்க்கும் முன்னாள் மனைவியை சென்னையில் தங்கி இருந்து கணவன் குழந்தை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து முன்னாள் மனைவி தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரியானா மாநிலத்தின் குருகிராமில் பணியாற்றும் மனுதாரர் சென்னைக்கு வர முடியாது என்றும் குழந்தையை காண கூறிய வழக்கில் குழந்தையை காண வரும் முன்னாள் கணவரை எப்படி நடந்து கொள்ள வேண்டும் என நீதிபதி போதனை செய்ய முடியாது என்றும் மனைவி தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் குழந்தை காண வரும் முன்னாள் கணவருக்கு தேநீர் வழங்கி உபசரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை தனி நீதிபதி தனது அதிகார வரம்புமீறி பிறப்பித்துள்ளார் என்று கூறி தனிநீதிபதி உத்தரவை ரத்து செய்ய உத்தரவிட்டனர். இதனையடுத்து குழந்தையை காண விரும்பினால் முன்னாள் கணவர் முன்கூட்டியே தகவல் தெரிவித்து அரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் சென்று சந்திக்கலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.