விவேகானந்தர் நினைவு பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இடையே பாலம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘கன்னியாகுமரி மாவட்டம் வளர்ச்சி பெற மாவட்டம் செழிக்க அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள். மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக, பாஜக பிரதிநிதிகள் இல்லாததால் குறைகள் அரசுக்கு தெரிவிப்பதில்லை. அதனால் வளர்ச்சி தடைபடுகிறது. எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் தொகுதிக்காக எதையும் செய்யவில்லை. ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றால்தான் தொகுதி வளர்ச்சி பெறும்.
எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் சரக்கு பெட்டக முனையம் குறித்த தவறான செய்தியைப் பரப்பி வருகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் சரக்கு பெட்டக மாற்று வர்த்தக துறைமுகம் அமைக்கப்பட மாட்டாது. தேர்தல் நேரத்தில் பொய்யான தகவலை கூறி மக்களை திசை திருப்பி அதனை அரசியல் ஆக்கி மக்களை ஏமாற்றும் தந்திரத்தை எதிர்கட்சிகள் பரப்புகின்றனர். பொய்யை கூறுவதில் எதிர்க்கட்சியினர் கைதேர்ந்தவர்கள். ஆணித்தரமாக கூறுகிறேன் குமரி மாவட்டத்தில் சரக்கு பெட்டக மாற்று வர்த்தக துறைமுகம் வராது.
பொய் பேசுவதில் கைதேர்ந்தவர்கள் திமுக காங்கிரஸ் கட்சியினர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் இல்லாவிட்டாலும் சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை தேவைகளை அதிமுக அரசு நிறைவேற்றியது. மின்வெட்டு இல்லை, பஞ்சம் இல்லை தற்போது தமிழகம் வெற்றி நடை போடும் தமிழகமாக உள்ளது. மீனவர்கள் கடன்பெற மீனவர்களுக்கான வங்கி அமைக்கப்படும். மீனவர்களுக்கு உயிர் சேதம் ஏற்பட்டால் இழப்பீடு 2 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
கன்னியாகுமரி மாவட்டம் சுற்றுலா மாவட்டம் அதனை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விவேகானந்தர் நினைவு பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இடையே பாலம் அமைக்கப்படும். கன்னியாகுமரி மாவட்டத்தில் 41 அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக் திறந்து சாதனை படைத்தது அம்மாவின் அரசு என அவர் பேசினார்.