நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். திரைப்பட படப்பிடிப்புகள் பங்கேற்று வந்த நிலையில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.
அவருக்கு தொடர்ந்து எக்மோ கருவி மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருக்கு ரத்தக் குழாய் அடைப்பை நீக்க catheterization என்ற சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுயநினைவு இல்லாத நிலையில் நடிகர் விவேக் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
தற்போது கவலைக்கிடமான நிலையில் உள்ள நடிகர் விவேக் உடல் நிலையில் முன்னேற்றம் குறித்து 24 மணி நேரத்துக்கு பிறகே தெரியவரும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கும் நெஞ்சு வலிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், தடுப்பூசி போட்டுக்கொண்ட சில மணி நேரத்திலேயே நெஞ்சுவலி வர வாய்ப்பில்லை என்று சுகாதாரத்துறை செயலர் விளக்கம் அளித்துள்ளார்.