விஷாலின் 33-வது படத்தை கார்த்திக் தங்கவேலு இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘எனிமி’ படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து விஷால் அறிமுக இயக்குனர் து.பா.சரவணன் இயக்கத்தில் ‘வீரமே வாகை சூடும்’ படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் விஷாலின் 32-வது படத்தை அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்க இருக்கிறார்.
சுனைனா கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தை விஷாலின் நண்பர்கள் ரமணா, நந்தா இருவரும் தயாரிக்கின்றனர். இந்நிலையில் விஷாலின் 33-வது படத்தை அடங்கமறு படத்தை இயக்கிய கார்த்திக் தங்கவேலு இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தை பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.