வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகையை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள இளநகர் பகுதியில் முத்துலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் சுப்பிரமணி கடந்த 7 ஆண்டுகள் முன்பு உயிரிழந்த நிலையில் இவர் தனது மகள் ஹேமாவதியுடன் தனியாக வசித்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று முத்துலட்சுமி தனது மகளுடன் உறவினர் வீட்டு விஷேசத்திற்காக தேவம்பாளையத்திற்கு சென்றார்.
இதனையடுத்து மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்த போது வீட்டின் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் பீரோவில் இருந்த 6 பவுன் ஆரம், 3 பவுன் நெக்லஸ், தங்க சங்கிலி, வளையல் என மொத்தம் 15 பவுன் நகை திருடு போயிருந்தது. இதுகுறித்து முத்துலட்சுமி வேலகவுண்டம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து திருடிய மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.