விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்தச் சம்பவத்தில் முக்கிய புள்ளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாடு முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள இந்த நிலையில், பஞ்சாபில் சென்ற வாரம் புதன்கிழமை இரவில் நடந்த விஷ சாராய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. விஷ சாராயம் குடித்ததால் அமிர்தசரஸ், படாலா மற்றும் டார்ன்தரன் போன்ற 3 மாவட்டங்களை சேர்ந்த 111 பேர் இதுவரை பலியாகி இருக்கின்றனர். விஷ சாராய பிரச்சனையில் முதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தபொழுதும், மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.
இந்த பிரச்சினைக்காக, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிங் உறுதியாக கூறினார். இந்த வழக்கு தொடர்பாக 3 மாவட்டங்களிலும் 563 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சம்பவத்தில், கலால், வரி துறை அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்கள், 2 டி.எஸ்.பி.க்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் 4 பேர் ஆகியோரை முதல் மந்திரி அமரீந்தர் சிங் சஸ்பெண்டு செய்ததுடன், அவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார். இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட அனைவரையும் கைது செய்யும்படியும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டுமெனவும் காவல்துறையினருக்கு அவர் உத்தரவிட்டார். இந்த நிலையில், போலீசாரால் தேடப்பட்டு வந்த ராஜீவ் ஜோஷி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், பஞ்சாபின் லூதியானா நகரில் பெயிண்ட் கடை ஒன்றின் உரிமையாளராக உள்ளார். இவர், 3 டிரம்களில் மெத்தனால் என்ற வாயுவை வினியோகம் செய்து வந்துள்ளார். இந்த மெத்தனாலை அடிப்படையாக கொண்டே விஷ சாராயம் தயாரிக்கப்பட்டு உள்ளது.
மேலும் அவரை விசாரிக்கையில், பல்வேறு வகையான ஆல்கஹால் மற்றும் எரிசாராயம் ஆகியவற்றை பஞ்சாப் மற்றும் டெல்லியின் பல இடங்களில் இருந்தும் கொள்முதல் செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றொரு நபரான தர்மீந்தர் என்பவர் இன்று கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவரிடம் இருந்து 50 லிட்டர் ஆல்கஹாலை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதனால், இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் கைதானவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்து உள்ளது. அவர்களில் 21 பேர் டார்ன்தரன் நகரிலும், 10 பேர் அமிர்தசரஸ் கிராம பகுதியிலும், 9 பேர் படாலா நகரிலும் இருந்து கைது செய்யப்பட்டுள்ளனர். இதைதொடர்ந்து கைதான ஜோஷி அளித்துள்ள தகவல், இந்த சம்பவத்தில் தொடர்புடைய வேறு சில முக்கிய புள்ளிகளையும் போலீசார் கண்டறிய உதவியாக இருந்து வருகிறது.