விஷ வாயு தாக்கி வடமாநில தொழிலாளர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்துள்ள மன்சூர் கிராமத்தில் தனியார் மீன் எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகின்றது. இந்த தொழிற்சாலையில் வடமாநில தொழிலாளர்கள் பலரும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் தொழிற்சாலையில் உள்ள தொட்டியில் இருக்கும் ரசாயனம் கலந்த கழிவுநீரை சுத்தம் செய்வதற்காக ஓடிசாவை சேர்ந்த நபின் ஓரம் 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியில் இறங்கியுள்ளார்.
இதனையடுத்து வெகுநேரமாகியும் அவர் வெளியே வராததால் அங்கு தொட்டிக்கு அருகே நின்று கொண்டிருந்த ஒடிசாவை சேர்ந்த அனில்மாஜி, ஜாஜ்மன் குஜூர் ஆகிய 2 தொழிலாளர்களும் தொட்டிக்குள் இறங்கியுள்ளனர். அப்போது அந்த தொட்டி சரிந்து கீழே விழுந்துள்ளது. இதனை பார்த்த அங்கிருந்த மற்ற தொழிலாளர்கள் அருகில் சென்று பார்த்த போது 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி மயங்கியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் மீட்டு தொண்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து பரிசோதனை செய்ததில் நபின் ஓரம் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது ஜாஜ்மன் குஜூர், அனில்மாஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நபின் ஓரத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.