நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் மோகனகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் “கே” பிரிவில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வருகிறார். அதே அலுவலகத்தில் வேலை பார்க்கும் திருமணம் ஆன 38 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் மோகன கிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில் வசிக்கும் சிவசுப்பிரமணியம் என்பவர் தனது youtube சேனலில் இந்த சம்பவம் குறித்த செய்தியை வீடியோவாக வெளியிட்டு பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் முதல் தகவல் அறிக்கை குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த அந்த பெண் ஊட்டி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் ஊட்டி மேற்கு போலீசார் விசாரணை நடத்தி பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிடுதல், பெண்ணை அவமதித்தல் மற்றும் பெண் வன்கொடுமை தடுப்பு ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிவசுப்பிரமணியனை தேடி வருகின்றனர். மேலும் அவர் வெளியிட்ட வீடியோவை நீக்கி விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.